தேர்தலுக்குப் பின் : மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்புகளும் சவால்களும்

 

இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய வலிமை தேர்தல் ஆகும். தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்குகின்றன. மக்கள் தங்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வாக்களிக்கின்றனர். அந்த மக்களுள் மாற்றுத்திறனாளிகள் ஒரு முக்கியமான சமூக அங்கமாக உள்ளனர்.  'மாற்றுத்திறனாளிகள்' எனும் வலிமைமிக்க சமூகத்தினர், தங்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியமான வாழ்வாதாரத்திற்காகப் புதிய அரசின் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

அவர்கள் நாட்டின் சம உரிமை பெற்ற குடிமக்கள். தேர்தலுக்கு பிந்தைய காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வெறும் நலத்திட்டங்களையே மட்டும் எதிர்பார்ப்பதில்லை; மரியாதை, சமத்துவம், சுயநிறைவு, வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையையும் எதிர்பார்க்கின்றனர்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூக நீதி

  • இடஒதுக்கீடு அமலாக்கம்: அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 4 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பின்னடைவுப் பணியிடங்களை (Backlog Vacancies) சிறப்புத் தேர்வு மூலம் நிரப்ப புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உதவி செய்யப்பட வேண்டும் என்று மட்டும் விரும்பவில்லை. அவர்கள் உரிமையுடன் வாழ விரும்புகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், போக்குவரத்து, அரசு சேவைகள் ஆகிய அனைத்திலும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வங்கிகள் போன்ற இடங்களில் தடையற்ற அணுகல் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்
  • தனியார் துறை பங்களிப்பு: அரசுத் துறையில் மட்டுமல்லாது, தனியார் நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்குப் போதிய வேலைவாய்ப்பை உறுதி செய்ய ஊக்கத்தொகை அல்லது வரிச் சலுகைகளை அரசு அறிவிக்க வேண்டும்.
  • உயர்கல்வி உதவி: உயர்கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தடையற்ற உதவித்தொகை மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகள் (Laptops, Braille devices) வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

தடையற்ற சூழல் (Accessibility) - ஒரு அடிப்படை உரிமை

நவீன நகரமயமாக்கலில் மாற்றுத்திறனாளிகள் பொது இடங்களைப் பயன்படுத்துவது இன்றும் பெரும் சவாலாகவே உள்ளது.

  • பொதுக் கட்டிடங்கள்: அனைத்து அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் சாய்தளங்கள் (Ramps), மின்தூக்கிகள் (Lifts) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • போக்குவரத்து வசதி: தாழ்தளப் பேருந்துகளை (Low-floor buses) அதிக அளவில் அறிமுகப்படுத்தி, பொதுப் போக்குவரத்தை அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும். ரயில் நிலையங்களில் தன்னார்வலர்களின் உதவியின்றி பயணம் செய்யும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

சமூகப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உதவிகள்

 பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மாதாந்திர உதவித்தொகை ஒரு முக்கிய வாழ்வாதாரமாகும்.உதவித்தொகை உயர்வு: தற்போது வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகையை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும் (குறைந்தது ₹3,000 முதல் ₹6,000 வரை).

  • மருத்துவக் காப்பீடு: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக சிகிச்சை முறைகளையும், உபகரணங்கள் வாங்குவதற்கான நிதியையும் அதிகரிக்க வேண்டும்.

அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு

  • "எங்களைப் பற்றிய முடிவுகளை எங்களிடம் கேட்காமல் எடுக்காதீர்கள்" என்பது மாற்றுத்திறனாளிகளின் உலகளாவிய முழக்கம். aagum
  • உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு: பெண்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் வழங்கப்படுவது போல, உள்ளாட்சித் தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் அவர்களின் உள்ளூர் பிரச்சினைகளை அவர்களே தீர்க்கும் அதிகாரம் கிடைக்கும்.
  • ஆலோசனைக் குழுக்கள்: மாற்றுத்திறனாளிகள் நல வாரியங்களில் தகுதியான மாற்றுத்திறனாளி உறுப்பினர்களைக் கொண்டு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்.

சட்ட ரீதியான பாதுகாப்பு (RPwD Act 2016)

  • 2016-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 'மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்' காகித அளவில் மட்டுமே இல்லாமல், அதன் விதிகள் அடிமட்டம் வரை செயல்படுத்தப்பட வேண்டும். மாவட்ட அளவில் இதற்கென தனி நீதிமன்றங்கள் மற்றும் குறைதீர்க்கும் அதிகாரிகளை நியமிப்பது அவசியமாகும்
  • மாற்றுத்திறனாளிகள் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது சலுகைகளை அல்ல, சம வாய்ப்புகளை மட்டுமே. புதிய அரசு வெறும் நலத்திட்டங்களோடு நின்றுவிடாமல், மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய ஒரு 'நீதிமிக்க சமூகத்தை' (Inclusive Society) உருவாக்க வேண்டும். அவர்களின் திறமைகளை அங்கீகரித்து, பொருளாதாரப் பங்களிப்பாளர்களாக அவர்களை மாற்றும்போதுதான் உண்மையான ஜனநாயகம் மலரும்.

"ஊனத்தை எண்ணித் தயங்காதே - உலகம் உனது, வெல்லத் துணிந்து நில்!" என்ற நம்பிக்கையை விதைக்கும் அரசாக இது அமைய வேண்டும்.

டி. ஏ.பி. வரதகுட்டி

மாநில தலைவர்

Cell : 98410 48947